ஆலயத்தில் பூஜை நடைபெறும் விபரங்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் பற்றிய விபரங்கள் அறிய பார்க்கவும்.
வெண்பனி மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும், குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும், பூத்துக் குலுங்கும் சோலைகளும், துள்ளி விளையாடும் புள்ளி மான்களும், புள்ளினங்களின் இசையும், நீர் நிறைந்த வயல்வெளியும், விளைந்த நெல்மணிகள் காற்றில் ஒலிக்கும் சங்கீத ஒசையும் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசீகரிக்கும் மாட்சிமை பொருந்திய எழில் நிறைந்த திருநிலை கிராமத்தில் வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் பாலவிநாயகரும், வலதுபுறம் பாலமுருகப் பெருமானும் அருட்காட்சி தருகின்றனர்.
மூவேழு உலகை வலம் வந்த வண்ணம், மூ இலை வேல் கையனாம், முக்கண்ணனாம், மூவருள் முதல்வனாம் மும்மலம் அழிப்பவனாம், இவ்வாறாக மூன்று நிலை கொண்டு உயர்ந்து நிற்கும் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வாலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது.
நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். அவரைக் காணுகையில் நம் தடைகள் தகர்ந்து போகின்றன.
நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆறுமுகமாம், பன்னிரெண்டு கைகளாம், மயில் மீதமர்ந்த வேலவனாம், வேண்டுதல் செய்தால் கைமேல் பலன்தரும் பாலகனாம் முருகப் பெருமான் அமர்ந்து அருளாசி வழங்கி அன்பர்களுக்கு மூவேழு வலம் வந்த நாயகனைக் காண வழிவிடுகின்றார்.
16 கால் மண்டப நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வீபூதி விநாயகரை தரிசனம் செய்யலாம். இவரை விபூதி கொண்டு நாமே அபிஷேகம் செய்தால் செல்வம், கல்வி, அறிவு பெறலாம். இது வேறு எங்கும் காணாத இவ்வாலயத்தின் சிறப்பம்சம். மண்டபத்தின் உள்ளே ஈசன் மனிதனாக உலகை வலம்வந்து ஒரு நிலையில் திருநிலையாய் நின்ற அற்புத கோலமும், அவரை ஒரு நிலையில் ஆட்கொண்ட அங்காளபரமேஸ்வரி ஈசனை வணங்கி நிற்கும் காட்சியும், இவர்கள் இருவரையும் திருமூலரும், இராமலிங்க அடிகளாரும் வணங்கி நிற்பதையும் காணலாம்.
தங்கமுலாம் பூசிய தகட்டால் வேயப்பட்ட இரண்டாம் நிலை வாயிலின் இடதுபுறம் சித்திபுத்தி விநாயகரும், வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். நுழைவு வாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சக்தியுடன் அமர்ந்து எம்பெருமான் அருளும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த, மானிடம் காக்க வந்த முதற் கடவுளாக, அருள் தருவதில் முன்னிற்கும் மூர்த்தியாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக அமர்ந்து காட்சி தருகின்றார்.
சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய, அகங்காரம் நீக்கி அன்புதனை புகுத்திடும் அன்னையாக, அடியவர்களின் துயரை விரைவில் நீக்கிடும் வடிவாம்பிகையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர்.
ஆலயத்தில் தட்சினாமூர்த்தி கோபுரத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளார். பைரவர் கோபுரத்தின் வட திசையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். சிவனும் சக்தியும் கால் பதித்து ஓருசேர நின்ற இவ்விடத்தில் சிவபாதமும், சக்தி பாதமும் தனித்தனியாக காட்சி தருவது தரிசிப்பவர் பாவத்தை போக்கவல்ல கண்கொள்ளா காட்சியாகும்.
சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கி நின்று காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். மேலும் சிவன் மனித ரூபத்தில் உலகை பெரியாண்டவராக அவதாரம் எடுத்து வலம் வந்தபோது, நந்தி பகவானும் அவ்வாறே கோலம் கொண்டு வலம் வந்து இறைவனின் முன்னால் மனித ரூபத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அரிய காட்சியை இங்கு காண முடியும்.
ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த குளத்திற்கு செல்லும் வழியில் முன்னால் தனி சன்னதி கொண்டு விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க நாகாத்தம்மன் கிழக்கு நோக்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் சகலமும் கிட்டும் என்பது இறை அன்பர்களின் நம்பிக்கை.
ஆலயதொடர்புக்கு:
ஏகசீலன், ஆலய நிர்வாகி
கை தொலைபேசி: 9842740957.