பெரியாண்டவர் ஆலயம், திருநிலை கிராமம்



மூலவர் பெரியாண்டவர்
Periyandavar

ஸ்ரீ பெரியாண்டவர் துதிப்பாமாலை
திருநீற்றை மருந்தாக்கி
உறுநோயை போக்கிட்ட
குருவான பெரியாண்டவா
கருக்கொள்ள வரம் வேண்டி
வருகின்ற மாந்தர்க்கு
தருகின்றாய் மகவல்லவா

விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா
மதிதந்து நிதிதந்து
மனதார அருள்தந்து
மகிழ்வாக எனைப்பாரய்யா

நீர்சூழ்ந்த உலகோரை
நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா
ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க
பொழிகின்ற மழையல்லவா

மனம்நொந்து விழிமூடி
உனைவேண்டி தொழுவார்க்
குமலர்தந்து குறிசொல்லுவாய்
தினந்தோறும் உனையெண்ணி
திருசேர வரம் வேண்டும்
எனையேனோ மறந்தீரய்யா

மணம்வேண்டி தொழுகின்ற
மங்கையரின் உளமேற்க
மாங்கல்யம் தரவேண்டுமே
மகவொன்று தரவேண்டி
மனமேங்கி நிற்போர்க்கு
பகவானுன் அருள் வேண்டுமே

வருந்துன்பம் தடுத்திட்டே
வளமான நிலைசேர்க்கும்
திருநிலையின் பெரியாண்டவா
பெருந்துயரம் எனைத்தீண்டா
பேறெனக்கு தரவேண்டும்
பெரியோனே பெரியாண்டவா

கருவின்றி உருவான
திருவே உன் அருள்கேட்டேன்
வரவேண்டும் தரவேண்டுமே
வருவோரின் துயர்கண்டு
வளம்தந்து நலம்தந்து
பெருவாழ்வு நீ தாருமே
உமையாளின் கோபத்தால்
உருமாறி திரிந்தோடி
திருநிலையில் அமர்ந்தீரய்யா
எமையாளும் ஈஸ்வரனே
எந்நாளும் உனைமறவா
நிலையெனக்கு தருவீரய்யா

வேலாயுதம் கொண்ட
வித்தகனைப் பெற்றவளின் 
சூலாயுதம் ஏற்றவா
சூலாயுதம் தன்னின்
சூட்சுமத்தை நன்றிவேன்
சுகம் தந்து எனைமாற்றவா

பிடிமண்ணாய் உனைவைத்து
பெருவாழ்வு தனைவேண்டும்
பேராசை கொள்வோமய்யா
அடிபோற்றி நின்றோரின்
அகமேற்று நல்வாழ்வை
அளிப்பதுவும் நீர்தானைய்யா

உமையாளை உடன்சேர்த்து
உலகாளும் பெரியோனே
உனைகாண வந்தோமன்றோ
சுமையான இன்னல்களை
சுடர்முன்னே இறக்கிவிட்டோம்
சுகம்யாவும் பெறுவோமன்றோ

ஆக்கம்: திரு. கண்ணப்பன், ஆசிரியர், மானாம்பதி

திருவிளங்க அருள்வோனே திருநிலையில் அமர்ந்தோனே ஒருநிலையில் தான் இருந்து ஓங்குபுகழ் தருவோனே பிரியமுடன் உனைப் பணிந்தால் அரியவரம் தந்தருள்வாய் பெரியாண்டவா என நினைத்தால் நிமிடத்தில் வந்தருள்வாய் நலம்காக்கும் நாயகனே வளம் சேர்க்கும் தூயவனே குலம் காக்கும் காவலனே பலம் சேர்க்கும் மறையோனே உளமாற பணிந்திட்டால் உயர்வளிக்கும் பெருமானே வரும்துன்பம் தனைநீக்கி பெரும்புகழைத் தருவோனே உன் பொற்பாதம் பணிகின்றோம் பெரியாண்டவ பெருமானே

ஆக்கம்: திரு அருள்மணி, திருக்கழுக்குன்றம்