ஆலயத்தில் பூஜை நடைபெறும் விபரங்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் பற்றிய விபரங்கள் அறிய பார்க்கவும்.
சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உரு கொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து, சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து, கற்பூர ஆராதனை காட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் மாலைப் பொழுதில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பூஜை முடிந்தவுடன் அன்னதானமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழக்களும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் மற்றும் ஈசனின் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம்.
பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய விரும்பும் குடும்ப அங்கத்தினர் முதலில் பெரியாண்டவர் ஆலயத்திற்கு வருகை தந்து ஆண்டவனை முதலில் வணங்கி இறையன்பர்களின் குடும்பத்தினருடன் பெரியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் தங்கள் உறவினர்களுடன் சென்று தங்களை நீரினால் சுத்தம் செய்துகொண்டு சித்தாமிர்த குள படித்துறையில் அமர்ந்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் கொண்டு புஷ்பம் வைத்து உலகின் முதல் கடவுளாம் விநாயகப் பெருமானை நினைத்து தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டவேண்டும். பெரியாண்டவர் மற்றும் அங்காளபரமேஸ்வரி கலசம் உருவாக்க வேண்டும். அதற்கு இரண்டு கலசங்கள் வைத்து கங்கை நீர் அதில் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், எலும்பிச்சைபழம் மற்றும் ஒருரூபாய் நாணயம் குடத்தில் விட்டு மாவிலை வைத்து அதன்மேல் மட்டை தேங்காய் வைக்கவேண்டும்.
முதல் கலசம் மட்டை தேங்காய் வைக்கப்பட்ட கலசத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு வெள்ளை துண்டு அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டாவது கலசம் வேப்பிலையால் கரகம் செய்து உச்சியில் எலும்பிச்சைபழம் செருகி மஞ்சள் குங்குமம் இட்டு கதம்ப மலரால் கரகத்தை அலங்கரித்து சிகப்பு கலர் ஆடை கொண்டு அணிவித்து மலர்மாலை சூடி அங்காளபரமேஸ்வரியாக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டு கலசங்களுக்கும் ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூர ஆரதனை காட்டி பெரியாண்டவருக்கு அரோகரா பெரியாண்டவருக்கு அரோகரா என பலமுறை கூறி தம் உறவினருடன் மனம் உருகி வேண்டி வணங்குதல் வேண்டும். பெரியாண்டவர் சிவகண பூசைசெய்யும் தம்பதியினர் ஆளுக்கொரு கலசமாக தம் கைகளில் ஏந்தி பெரியாண்டவருக்கு அரோகரா கோஷத்தை எழுப்பியவாறு சித்தாமிர்த குளக்கரையில் இருந்து ஆலயத்திற்கு வரவேண்டும். வந்தபின் சுயம்புலிங்கத்தின் வலதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் பெரியாண்டவர் கலசமும் இடதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் அங்காளபரமேஸ்வரி கலசமும் வைக்கப்படவேண்டும்.
கலசங்கள் வருவதற்கு முன்பாக ஆலயத்தின் உள் மற்றும் வெளிப் பிரகாரத்தில் மஞ்சள் நீரால் தெளித்து துர்க்கா தேவியை மனதில் நினைத்து கற்பூர ஆராதனை செய்து துஷ்டதேவதைகள் உள்ளே வராமல் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பின் வெண் பூசணியை நான்காக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி ஆலயத்தின் வெளி பிரகாரம் நான்கு மூலைகளிலும் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும். பின் தம் உறவினருடன் சேர்ந்து இருபத்தி ஓர் சிவகணங்கள் [மண்பிள்ளையார்] தம் கைகளால் செய்வித்து அவற்றினை ஆலயத்தின் உள்ளே கொண்டுவந்து சுயம்புலிங்கத்தை சுற்றி செவ்வக வடிவில் இரண்டு இரண்டாக வைக்கப்படவேண்டும். எதிரடியாக ஓர் சிவகணமுமாக மொத்தம் இருபத்திஓர் சிவகணம் வைக்கப்படவேண்டும்.
மூன்று குத்துவிளக்குகளை எடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து ஒருமுகமாக திரி போட வேண்டும். முதல் குத்துவிளக்கில் மஞ்சள் துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ துர்க்காதேவியாக ஆவாகனம் செய்வித்து எதிரடியாக உள்ள ஒரு சிவகணம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். இரண்டாவது குத்துவிளக்கில் சிவப்பு துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆவாகனம் செய்வித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். மூன்றாவது குத்துவிளக்கில் வெள்ளை துண்டு அணிவித்து மாலை அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்வித்து பெரியாண்டவர் கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும்.
இருபத்திஓர் சிவகணங்களுக்கு அருகில் மண் அகல் விளக்கு கொண்டு திரி ஏற்றி வைக்கப்படவேண்டும். காரணம் இறைவன் ஜோதிவடிவம் காட்டி சுயம்புவாய் அமர்ந்து அருள்வடிவம் கொண்டு அன்பர்களை காப்பதினால்.
பூசை பொருற்களான எண்ணெய், சியக்காய்த்தூள், பால், தயிர், கதம்பத்தூள், தேன், எலும்பிச்சைபழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை கொண்டு தங்கள் உறவினர்கள் சுற்றம் சூழ சிவகணங்களுக்கு [மண்பிள்ளையார்] அபிஷேகம் செய்யப்படவேண்டும். அபிஷேகம் நிறைவு பெற்றவுடன் விபூதி மற்றும் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.
சுயம்புலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறவேண்டும். பின் அலங்காரம் முடிந்தவுடன் வாழையிலை கொண்டு படையல் போடவேண்டும். அதேபோல் இருபத்திஓர் சிவகணங்களுக்கும் இருபத்தி ஓர் வாழையிலை வைத்து அவற்றின் மேல் பொங்கல், வடை, பால் பாயசம், சுண்டல், வாழைப்பழம், வெற்றிலைபாக்கு மற்றும் இருபத்தி ஓர் தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப்படவேண்டும். பின் ஒவ்வோரு சிவகணங்களுக்கு முன்பும் 10 கிராம் எடையுள்ள கற்பூர கட்டி வைக்கப்படவேண்டும் விநாயகருக்கு கற்பூர ஆராதனை காட்டி பின் சுயம்புலிங்கத்திற்கு ஆராதனை காட்டி சிவசக்தி பாதத்திற்கு ஆராதனை காட்டி, பெரியாண்டவர் கலசம் மற்றும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் ஆராதனை காட்டி பின் தம் உறவினருடன் பெரியாண்டவருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் இருபத்தி ஓர் சிவகணங்களுக்கு முன்னாள் உள்ள கற்பூரத்தை ஏற்றப்படவேண்டும். பின்பு அனைவரும் திங்களில் ஜோதிநீ, தினகரன் ஜோதிநீ ,அங்கியில் ஜோதிநீ, அணைத்திலும் ஜோதிநீ, எங்களுள் ஜோதிநீ ,ஈஸ்வர ஜோதிநீ ,கங்கிலா ஜோதிநீ, கற்பூர ஜோதி நீயே என ஆண்டவனை நினைத்து மனம் உருகி பாடி வணங்கவேண்டும்.
இவ்வாறு பூஜை செய்வோருக்கு பெரியாண்டவர் சகல செளபாக்கியங்களும் வழங்குவார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய தேவையான பொருட்கள் | திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய தேவையான பொருட்கள் |
---|---|
மஞ்சள் 100 கிராம் குங்குமம் 100 கிராம் சந்தனம் 2 டப்பா கற்பூரம் 250 கிராம் சாம்பிராணி 100 கிராம் கதம்பத்தூள் 100 கிராம் நல்லென்ணெய் 1 கிலோ நெய் 100 கிராம் அவல் பொறிகடலை 150 கிராம் விபூதி [500 கிராம் ] சியக்காய் தூள்[2 பாக்கட்] தேன் 50 கிராம்(2பாட்டில்) பன்னீர் (2பாட்டில்) ஊதுபத்தி பாக்கட் இரண்டு வெட்டிவேர் 5 ரூபாய் திரிநூல் ஒன்று தீப்பெட்டி ஒன்று கலசநூல் உருண்டை இரண்டு பிள்ளையார் துண்டு தேங்காய் 20 இளநீர் 2 கல்யாண பூசணிக்காய் 1 எலும்பிச்சை பழம் 6 பூமாலை 6 கதம்ப பூ 20 முழம் வாழைப்பழம் 50 வாழை இலை [நுனி] 15 பச்சரிசி 1 கிலோ வெல்லம் 1 கிலோ பஞ்சாமிர்தம் 5 பழவகைகள் வெற்றிலை பாக்கு 20 ரூபாய் தயிர் 1/2 லிட்டர் பால் 1 லிட்டர் கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும். |
மஞ்சள் 50 கிராம் குங்குமம் 50 கிராம் சந்தனம் 1 டப்பா கற்பூரம் 25 கிராம் கதம்பத்தூள் 50 கிராம் நல் லென்ணெய் 200 கிராம் நெய் 100 கிராம் அவல் பொறிகடலை 150 கிராம் விபூதி [500 கிராம் ] சியக்காய் தூள்[1 பாக்கட்] தேன் 50 கிராம்(1பாட்டில்) பன்னீர் (1 பாட்டில்) ஊதுபத்தி பாக்கட் ஒன்று வெட்டிவேர் 5 ரூபாய் திரிநூல் ஒன்று தீப்பெட்டி ஒன்று கலசநூல் உருண்டை இரண்டு பிள்ளையார் துண்டு ஒன்று தேங்காய் 2 இளநீர் 2 எலும்பிச்சை பழம் 3 பூமாலை 2 கதம்ப பூ 5 முழம் வாழைப்பழம் 10 வாழை இலை [நுனி] 1 பச்சரிசி 1 கிலோ வெல்லம் 1 கிலோ பஞ்சாமிர்தம் 5 பழவகைகள் வெற்றிலை பாக்கு 5 ரூபாய் தயிர் 1/2 லிட்டர் பால் 1 லிட்டர் கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும். |