Periyandavar

Facing font problems

This website uses Unicode Tamil for seeing Tamil Language content. Eventhough unicode Tamil font "latha" is installed by default in Windows XP, Tamil language support is NOT installed by default. To enable viewing of Tamil pages in Windows XP, kindly do as advised in the following Help Page


ஆலயத்தில் பூஜை நடைபெறும் விபரங்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் பற்றிய விபரங்கள் அறிய பார்க்கவும்.

பூஜை விபரங்கள்
பூஜை முறைகள்
பெரியாண்டவர் துதிப் பாமாலை

சித்திபுத்தி விநாயகர்


வள்ளி தெய்வானையுடன் முருகர்


நாகாத்தம்மன்

ஆலய வரலாறு ...

மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன்

பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.

சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.

அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.

மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. செங்கல்பட்டில் இருந்து தினமும் திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருகழுக்குன்றம் வழியாக T11 என்ற பேருந்து காலை 9 மணி மற்றும் மாலை 2 மணி இரவு 9.0 மணிக்கு சென்றுவருகிறது.

ஆலயதொடர்புக்கு:
ஏகசீலன், ஆலய நிர்வாகி
கை தொலைபேசி: 9842740957.